சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மாற்றுத்திறனாளி உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மாற்றுத்திறனாளி உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Oct 2020 3:45 AM IST (Updated: 20 Oct 2020 7:49 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி உள்பட 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர், நேற்று தனது தம்பி காளிமுத்து, தாயார் வரதம்மாள் ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ரமேஷ் தனது குடும்பத்துடன் பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யம் கார்டன் பகுதியில் ரூ.1½ லட்சம் கொடுத்து வீட்டினை குத்தகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார். குத்தகை காலம் நிறைவடைந்ததால் பணத்தை திரும்ப கேட்டதற்கு, அதனை வீட்டின் உரிமையாளர் தரமறுத்துள்ளார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதேபோல் பனமரத்துப்பட்டி அருகே திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்த விவசாயி பழனி (54), அவரது மனைவி தனலட்சுமி, பேரன் யோகேஷ், பேத்திகள் தீபிகா, யாழினி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது போலீசார் விவசாயி பழனியின் கையிலிருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, அவரிடம் விசாரித்தனர்.

இதில், பழனியின் தந்தைக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதனை தற்போது அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், இதுகுறித்து கேட்ட பழனிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பழனி குடும்பத்தினருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நாளில் மாற்றுத்திறனாளி உள்பட 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story