புதிதாக 64 பேருக்கு நோய்தொற்று: மதுரையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


புதிதாக 64 பேருக்கு நோய்தொற்று: மதுரையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2020 3:30 AM IST (Updated: 20 Oct 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதுபோல், புதிதாக 64 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

மதுரை,

மதுரையில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தினமும் 80-க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் மதுரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 73, 67 வயது முதியவர்கள், 57 வயது ஆண் ஆகியோர் நேற்று இறந்து போனார்கள். இதுபோல், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டியும் உயிரிழந்தார். இவர்களுக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில நோய்களும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களை சேர்த்து மதுரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மதுரையில் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கிறார்கள்.

இதுபோல், மதுரையில் நேற்று புதிதாக 64 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்றுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 18 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 916 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றும் 76 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இவர்களை தவிர 759 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மழைக்காலம் நெருங்கி வருவதால் வரும் காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு குழந்தைகளுடன் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு அறிவுறுத்தும் அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்” என்றனர்.

Next Story