இழப்பீடு வழங்கிய பின்னர் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு


இழப்பீடு வழங்கிய பின்னர் உயர்மின்கோபுரம் அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 20 Oct 2020 12:00 PM IST (Updated: 20 Oct 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிய பின்பு பணியை தொடர வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

தாராபுரம் தாலுகா சடையபாளையம் ஊராட்சி மானூர்பாளையம் எரக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சடையபாளையம் ஊராட்சித் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மானூர்பாளையம், எரக்காம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக பவர் கிரிட் நிறுவனம் சார்பில் மின் பாதை அமைக்க உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கும், பவர்கிரிட் நிறுவனத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சில வேலைகள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் இன்று வரை விவசாயிகளுக்கு நிலங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மரங்கள் ஆகியவைக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை.

இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து மதிப்பீடு செய்யாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மதிப்பீடு செய்து கொடுக்கும்படி கடிதம் கூட எழுதாமல் அலட்சியமாக உள்ளனர். பவர்கிரிட் அதிகாரிகள் விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தபடி நடந்துகொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

விவசாயிகள் யாரும் இப்போதைய நிலையில் உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுக்கவில்லை. தங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக கொடுத்துவிட்டு தங்கள் நிலங்களில் மீதமுள்ள வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். விவசாயிகளுக்கு நில மதிப்பீடு எவ்வளவு கிடைக்கும் எவ்வளவு நிலத்துக்கு அளவீடு செய்துள்ளனர் என்பதை வருவாய்த்துறையினர் சொல்ல மறுக்கிறார்கள்.

அரசு வழிகாட்டுதல்படி அதிகபட்ச நில மதிப்பீட்டை கணக்கில் எடுக்காமல் குறைவாக மதிப்பீடு செய்து பவர் கிரிட் நிறுவனத்தினர் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு உடனடியாக வழங்கி அதன்பிறகு உயர்மின் கோபுர பணியை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story