திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலன் இன்றி ஒருவர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 305-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலன் இன்றி ஆண் ஒருவர் பலியானார்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 200 பேர் நாள் ஒன்றிற்கு சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 305-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 166-ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பெண்கள் அடங்குவர்.
இதுபோல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,140 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 202 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 5 ஆயிரத்து 713 பேர் மாவட்டம் முழுவதும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதியதாக 326 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்ட 396 பேர் விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 448 பேருக்கு சளி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story