காவல்துறை சார்பில் சிறப்பு முகாம்: ஈரோடு டவுன் உள்கோட்டத்தில் 33 மனுக்கள் மீது உடனடி தீர்வு


காவல்துறை சார்பில் சிறப்பு முகாம்: ஈரோடு டவுன் உள்கோட்டத்தில் 33 மனுக்கள் மீது உடனடி தீர்வு
x
தினத்தந்தி 20 Oct 2020 8:22 PM GMT (Updated: 20 Oct 2020 8:22 PM GMT)

காவல்துறை சார்பில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் நடந்த சிறப்பு முகாமில் டவுன் உள்கோட்டத்தில் 33 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

ஈரோடு,

புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை ஒரே இடத்தில் வரவழைத்து, சுமுகமான தீர்வுகள் காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் அறிவுரை வழங்கி உள்ளார். அதன்பேரில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரன்நாயர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்கோட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை உத்தரவிட்டு உள்ளார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் உள்கோட்ட அளவிலான சிறப்பு மனுக்கள் பெறும் முகாம் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் மகாலில் நேற்று நடந்தது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமை தாங்கினார். முகாமில் ஈரோடு டவுன், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், தாலுகா, மொடக்குறிச்சி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் மகளிர் போலீஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.

விசாரணை

மக்கள் குறைதீர்க்கும் முகாம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. ஒரே இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்கார்ந்து மனுக்களை விசாரித்ததால் உடனடியாக பல புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ கூறுகையில், ‘இந்த முகாமில் 37 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டது. படிப்படியாக அனைத்து கட்டங்களிலும் நடத்த வேண்டிய விசாரணைகள் ஒரே இடத்தில் முடிக்கப்பட்டன. 33 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவருக்கு நிலுவையில் இருந்த கமிஷன் தொகையும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

4 மனுக்கள் குடும்ப வழக்கு மற்றும் ஜீவனாம்சம் தொடர்பானவை. எனவே அவற்றை சுமுகமாக முடிக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற முகாம்கள் தேவைப்படும் நிலையில் மீண்டும் நடத்தப்படும்,’ என்றார்.

Next Story