போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி: வாலிபர், துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு தாய்-மகன் கொலையில் தேடப்பட்டு வந்தவர்


போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி: வாலிபர், துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு தாய்-மகன் கொலையில் தேடப்பட்டு வந்தவர்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:13 AM IST (Updated: 21 Oct 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

தாய்-மகன் கொலையில் தேடப்பட்டு வந்த வாலிபரை கைது செய்ய சென்றபோது, போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் சாகர் அருகே பழைய இக்கேரி பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவருடைய மனைவி ரோகிணி. இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. பிரவீன் தாய் பங்காரம்மா. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு பிரவீனின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பிரவீனையும், அவருடைய தாய் பங்காரம்மாவையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஆனால் அவர்கள் ரோகிணியையும், 10 மாத குழந்தையையும் கொலை செய்யவில்லை. இதுகுறித்து சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீனும், ஸ்ருதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரவீன், ஸ்ருதியை விட்டு பிரிந்து ரோகிணியை திருமணம் செய்துகொண்டார். இதனால், ஸ்ருதி தனது புதிய காதலன் பரத்கவுடா என்பவருடன் சேர்ந்து பிரவீனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 11-ந்தேதி பரத்கவுடா தனது கூட்டாளிகளுடன் சென்று பிரவீனையும், அவருடைய தாய் பங்காரம்மாவையும் கொலை செய்தனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

இதையடுத்து சாகர் போலீசார் பரத்கவுடாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பரத்கவுடா சாகர் அருகே பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் சிவமொக்கா குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமி, சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபய பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, பரத்கவுடாவை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது அவரை போலீஸ்காரர் ஒருவர் பிடிக்க முயன்றார். அந்த சமயத்தில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு பரத்கவுடா தப்பியோட முயற்சித்தார்.

அப்போது இன்ஸ்பெக்டர் குமாரசாமி தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டு சரண் அடைந்துவிடும்படி பரத்கவுடாவை எச்சரித்தார். ஆனாலும் அவர் சரணடைய மறுத்து தப்பியோடினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமாரசாமி, பரத் கவுடாவின் வலது காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் போலீசார் காயமடைந்த போலீஸ்காரர் மற்றும் பரத்கவுடா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story