மழைநீரை அகற்றக்கோரி அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்


மழைநீரை அகற்றக்கோரி அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:39 AM IST (Updated: 21 Oct 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் - சின்ன வீராம்பட்டினம் செல்லும் மெயின்ரோட்டில் உள்ள ஓடைவெளி கிராமத்தில் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் ஓடைவெளி கிராமம் அனுகார்டன் பகுதியில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் குடியிருப்பை சுற்றி குளம்போல் தேங்கியது.

இதனால் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் குடியிருப்புகளில் விஷ பூச்சி, பாம்புகள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனுகார்டன் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர். அங்குள்ள புறவழிச்சாலை 4 முனை சந்திப்பில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் உள்ள மழை தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் நடந்த இந்த மறியலால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்தவுடன் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர ராஜன், உதவி பொறியாளர் யுவராஜ், அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் ஆகியோர் வந்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து அனு கார்டன் பகுதியில் அனந்த ராமன் எம்.எல்.ஏ., ஆணையர் சவுந்தரராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story