திருச்சிற்றம்பலம் அருகே, நள்ளிரவில் விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து 63 பவுன் நகைகள்-பணம் கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை


திருச்சிற்றம்பலம் அருகே, நள்ளிரவில் விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து 63 பவுன் நகைகள்-பணம் கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 Oct 2020 3:30 AM IST (Updated: 21 Oct 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 63 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்(வயது 52). விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு அனைவரும் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் அருள்ராஜ் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் சென்று உள்ளனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.

நேற்று அதிகாலையில் வழக்கம்போல் அருள்ராஜ் குடும்பத்தினர் கண்விழித்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனால் திடுக்கிட்ட அருள்ராஜ் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 63 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது.

மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச்சென்ற நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுப்பிரமணியன் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மாவட்ட விரல் ரேகை கூட துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கண்ணகி மற்றும் மாவட்ட தடய அறிவியல் துறை நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாக இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் அருள்ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா, சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து 63 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story