அயர்லாந்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் பார்த்து புகார்: வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது


அயர்லாந்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் பார்த்து புகார்: வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2020 4:44 AM IST (Updated: 21 Oct 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

அயர்லாந்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் பார்த்து அளித்த புகாரின்பேரில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைதானார். திருடும் போதெல்லாம் சிக்கி கொள்வதாக கொள்ளையன் புலம்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த செட்டியார் அகரம், மூர்த்தி நகர் 1-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரவள்ளி (வயது 67). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் வெளிநாட்டிலும், மகள் அண்ணாநகரிலும் வசித்து வருகின்றனர். சண்முக சுந்தரவள்ளி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

அயர்லாந்தில் குடும்பத்துடன் வசிக்கும் இவருடைய மகன் அருள்முருகன், தனியாக இருக்கும் தாயை கண்காணித்து கொள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அங்கிருந்தபடியே தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு தாய் என்ன செய்கிறார்? என்பதை செல்போனிலேயே பார்த்துவிட்டு பின்னர் தூங்கச்செல்வது வழக்கம்.

போலீசில் புகார்

நேற்று முன்தினம் சண்முகவள்ளி வீட்டை பூட்டிவிட்டு அண்ணாநகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். வழக்கம்போல் அயர்லாந்தில் இருந்தபடி செல்போனில் தாய் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த அருள்முருகன், வீட்டில் மர்மநபரின் நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர்கள் மோகன், வீரமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சண்முகவள்ளி வீட்டுக்குள் இருந்து சுவர் ஏறி குதித்து வெளியே வந்த மர்மநபரை மடக்கி பிடித்தனர். அவரது கையில் கத்தி, கஞ்சா, மடிக்கணினி இருந்தது. விசாரணையில் அவர், செங்கல்பட்டை சேர்ந்த முரளி என்ற சைக்கோ முரளி (25) என்பதும், சண்முகவள்ளி வீடு புகுந்து மடிக்கணினி திருடியதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

கொள்ளையன் புலம்பல்

காதலில் தோல்வியுற்ற முரளி, பிளேடால் தன் உடல் முழுவதும் அவ்வப்போது கீறி கொள்வார். இதனால் இவரது பெயர் சைக்கோ முரளி என வந்ததாக தெரிகிறது. எந்த வீட்டின் முன்பு கோலம் போடபடவில்லையோ, எந்த வீட்டின் முன்பு தூசிகள் படிந்து உள்ளதோ அந்த வீடுகளில் ஆள் இல்லை என உறுதி செய்து அந்த வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதுவரை அரும்பாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் திருடி உள்ளார். ஆனால் உடனடியாக போலீசில் சிக்கி கொள்வதாகவும், தற்போதும் திருடிவிட்டு வெளியே வரும்போது சிக்கிக்கொண்டதாகவும், இதுவரை பல வீடுகளில் திருடியும், அவற்றை நான் அனுபவிக்கவில்லை. திருடும் போதெல்லாம் போலீசில் சிக்கிக்கொள்கிறேன் என புலம்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story