சங்கரன்கோவிலில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம்: குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்


சங்கரன்கோவிலில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம்: குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Oct 2020 11:51 PM GMT (Updated: 20 Oct 2020 11:51 PM GMT)

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உதவி கலெக்டர் முருகசெல்வி, நகராட்சி ஆணையர் முகைதீன் அப்துல்காதர், தென்காசி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர்கள் ராஜாமணி, ஜெயலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மெர்லின் கிறிஸ்டோபர், நெல்லை கூட்டுறவு அச்சக சங்க தலைவர் கண்ணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், “சங்கரன்கோவிலில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்காக சாலைகளில் தோண்டப்படும் குழிகளை உடனே சீரமைக்க வேண்டும். ஏற்கனவே குடிநீர் குழாய் இருப்பதால் அவற்றை பாதிக்காத வகையில் பணியை செய்ய வேண்டும். திருவேங்கடம் சாலையில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களை விரைந்து நிரப்ப வேண்டும்“ என அறிவுறுத்தினார்.

இந்த வார இறுதிக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் ராஜலட்சுமி, மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் அறிவுறுத்தினார்.

Next Story