கூடலூர் - ஊட்டி மலைப்பாதையில் பழமையான ராணுவ பீரங்கியை கொண்டு செல்வதில் சிக்கல்


கூடலூர் - ஊட்டி மலைப்பாதையில் பழமையான ராணுவ பீரங்கியை கொண்டு செல்வதில் சிக்கல்
x
தினத்தந்தி 21 Oct 2020 11:49 AM IST (Updated: 21 Oct 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் பழமையான ராணுவ பீரங்கி டாங்கியை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் நடுவழியில் ராணுவ டாங்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் பகல் 3 மணி அளவில் கூடலூர் வழியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு பழமையான பீரங்கி டாங்கியை ராணுவ வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்ட டயர்கள் கொண்ட லாரியில் கொண்டு சென்றனர். கூடலூர் நகருக்குள் அகலம் குறைந்த சாலை என்பதால் பீரங்கி டாங்கியை கொண்டு சென்ற லாரியை வேகமாக இயக்க முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை லாரியை அங்கிருந்து ஓட்டிச்செல்ல முயற்சி செய்யப்பட்டது. ஆனால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதை மிகவும் மேடான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை என்பதால் அதிக எடை கொண்ட ராணுவ பீரங்கி டாங்கியை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 1960-ம் ஆண்டு முதல் 70-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா- சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற யுத்தங்களில் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 40 டன் எடை உள்ள பீரங்கியை லாரியில் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பளுதூக்கும் எந்திரம் மூலம் வேறு வாகனத்தில் ஏற்றி வெலிங்டன் ராணுவ மையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை கூடலூர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story