மாவட்ட செய்திகள்

சேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை: 400 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பின + "||" + Heavy rain in Salem Within 400 homes The water seeped in Lakes, dams filled

சேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை: 400 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பின

சேலத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை: 400 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பின
சேலத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 400 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஏரிகள், தடுப்பணைகளும் நிரம்பின.
சேலம்,

வளிமண்டல சுழற்சி காரணமாக சேலம் உள்பட சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணி முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.


சேலம் அஸ்தம்பட்டி, புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் என மாநகரில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த இந்த கனமழையால் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து ஓடியது. இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த மழையினால் கிச்சிப்பாளையம் ராஜாபிள்ளை காடு, பச்சப்பட்டி, நாராயணநகர், அம்மாபேட்டை, சீலாவரியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, சின்னேரி வயல்காடு, பெரமனூர், சத்திரம் என தாழ்வான பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் பெரிதும் அவதியுற்றனர்.

மேலும் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் கொண்டு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சத்திரத்தில் உள்ள அம்மா உணவகம், காமராஜர் நூலகத்தை மழை நீர் சூழ்ந்து நின்றது. இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அரிசிபாளையம் விநாயகர் கோவில் தெப்பக்குளமும் மழையால் நிரம்பியது. இதனிடையே கனமழையால் பொன்னம்மாபேட்டையில் உள்ள செங்கல் தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சேலம் நெய்காரப்பட்டி பகுதியில் உள்ள கொட்டமுத்தான் ஏரி சுமார் 360 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏரி முழு கொள்ளளவையும் எட்டியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் ஏரியை சுற்றியுள்ள தீரனூர், கலர்காடு, நெய்காரப்பட்டி, போடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் கொட்டமுத்தான் ஏரியின் ஊற்றுநீரும், மழைநீரும் சூழ்ந்ததால் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. மக்கள் அனைவரும் முட்டளவு தண்ணீரில் தான் நடந்து சென்று வருகின்றனர். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் கால்நடைகளை கூட கட்டமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். கொட்டமுத்தான் ஏரியில் உள்ள நீரை மதகு வழியாக திறந்துவிட்டால் தான் வீடுகள் முன்பு தேங்கி கிடக்கும் தண்ணீர் வடியும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆத்தூர் விநாயகபுரத்தில் வசிஷ்ட நதி தடுப்பணை உள்ளது. கடந்த ஒரு மாதமாக அந்த பகுதியில் பெய்து வரும் மழையால் இந்த தடுப்ப ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி வழிந்தது. அதன்பிறகு நீர்வரத்து குறைந்ததால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மீண்டும் வசிஷ்ட நதி தடுப்பணை 2-வது முறையாக நிரம்பி நீர் அருவி போல் தடுப்பணையை தாண்டி கொட்டியது.

இதனை காண ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும், சிறுவர்கள், வாலிபர்கள் தடுப்பணையில் உற்சாகமாக குளித்தனர். இதேபோல் கனமழையால் கன்னங்குறிச்சி மூக்கனேரியும் நிரம்பி வழிகிறது. இதனைக்காண ஏராளமான பொதுமக்கள் அங்கு படையெடுத்து வருகிறார்கள். ஏரியில் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் மாவட்டத்தில் ஆனைமடுவு, காடையாம்பட்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சேலத்தில் அதிகபட்சமாக 87.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மிட்டரில் வருமாறு:-

காடையாம்பட்டி-9, தம்மம்பட்டி-18, வீரகனூர்-38, கெங்கவல்லி-52, வாழப்பாடி-1, ஏற்காடு-14, ஆனைமடுவு-56, கரியகோவில்-50, ஆத்தூர்-50.6, பெத்தநாயக்கன்பாளையம்-6.

சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மேலும் அவ்வப்போது லேசாக மழை தூறியது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் வேகமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.