கடலூர், விருத்தாசலத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூர், விருத்தாசலத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:03 PM GMT (Updated: 21 Oct 2020 3:03 PM GMT)

கடலூர், விருத்தாசலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

தினசரி பஸ்களை இயக்கி செல்லும் தூரத்தை நீட்டித்து, தொடர்ந்து 20 மணி நேரம் வேலை வாங்குவதை கண்டிப்பது, ஊழியர்களுக்கு மெமோ வழங்கி, தற்காலிக பணிநீக்கம், பணிமனை இடமாற்றம் செய்வதை கண்டிப்பது, இதை தட்டிக்கேட்ட தொழிற்சங்க தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று காலை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஏ.எல்.எல்.எப். பொது செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். எல்.பி.எப். துணை பொதுச் செயலாளர் ஜெயராவ், எம்.எல்.எப். துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. பொருளாளர் அரும்பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. சம்மேளன துணை தலைவர் பாஸ்கர், மோகன கோபாலகிருஷ்ணன், ஏ.ஏ.எல்.எல்.எப். இணை பொது செயலாளர் ராஜாங்கம், ஐ.என்.டி.யு.சி. பொது செயலாளர் சாமிநாதன், எம்.எல்.எப். தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.பி.எப். துணை செயலாளர் செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் வீர செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., விடுதலை சிறுத்தைகள் கட்சி, எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story