பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம் புதிய செயலியை, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்


பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம் புதிய செயலியை, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Oct 2020 9:35 PM IST (Updated: 21 Oct 2020 9:35 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய செயலியை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, திருட்டு, பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 20 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள வழக்கமான குற்றவாளிகள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என 590 குற்றவாளிகள் மீது நன்னடத்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 பேருக்கு நன்னடத்தை பிணை நிறைவேற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிணையினை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பிணை காலம் முடியும் வரை சிறையில் இருக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடசேரியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சேகர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய சரக பகுதிகளில் மேற்கொண்ட தீவிர சோதனையின் விளைவாக 31 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 71 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 63 கிலோ 670 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாக 93 பேர் மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டனர். 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 450 மதிப்பிலான கொள்ளைபோன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பொருள் இழப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளில் 50 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.13 லட்சத்து 7 ஆயிரத்து 550 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 5,929 மனுக்கள் பெறப்பட்டு, 5,670 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 259 மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் செல்போன் தவறவிட்ட நபர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 62 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 12-7-2020 முதல் 17-10-2020 வரை சட்டவிரோதமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 32 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள், வாகன விபத்து, ஊரடங்கு காலத்தில் ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், அடையாளம் தெரியாத வாகனங்கள் என போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 2,596 வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் சூப்பிரண்டு ஈஸ்வரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தொடர்ந்து கூறுகையில், குமரி மாவட்டத்தில் பொது மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் ஹெல்ப்லைன் எண் 70103 63173 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் பெயர், முகவரியுடன் புகார் தெரிவிக்கலாம். அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மூலமாகவோ, உயரதிகாரிகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்கள் எந்த இடத்தில் என்ன குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்ற தகவலை இந்த வாட்ஸ்-அப் செயலி மூலம் தெரிவிக்கலாம். ஆனால் தகவல் தெரிவித்தவர்கள் பெயர் விவரத்தை வெளியிட மாட்டோம். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் பொய்யான புகார்களை, தேவையற்ற புகார்களை இந்த வாட்ஸ்-அப் செயலியில் தெரிவிக்கவேண்டாம். இந்த செயலியில் புகார்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்றார்.

பின்னர் அவர் இந்த செயலியை தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த ½ மணி நேரத்துக்குள் இந்த செயலி மூலம் 6 புகார்கள் வந்தன. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Next Story