அனுமதி கிடைத்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில் பெண்கள் உற்சாக பயணம் 4 மகளிர் சிறப்பு ரெயில்களும் இயக்கம்


அனுமதி கிடைத்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில் பெண்கள் உற்சாக பயணம் 4 மகளிர் சிறப்பு ரெயில்களும் இயக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2020 9:41 PM GMT (Updated: 21 Oct 2020 9:41 PM GMT)

மின்சார ரெயிலில் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று பெண்கள் ரெயிலில் உற்சாகமாக பயணித்தனர். மேலும் அவர்களின் வசதிக்காக 4 மகளிர் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில்களில் அத்தியாவசிய பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், தூதரக அதிகரிகள் போன்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் படிப்படியாக அறிவிக்கப்படும் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக டப்பாவாலாக்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் போன்றவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பெண்களுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. மாநில அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இந்த அனுமதியை வழங்கினார். கூட்ட நெரிசல் இல்லாத நேரமான காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரெயில் சேவை வரையிலும் பெண்கள் பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரெயில்களில் அனைத்து பெண் பயணிகளும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 7 மாதத்திற்கு பிறகு மின்சார ரெயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் உற்சாகம் அடைந்தனர்.

மகளிர் சிறப்பு ரெயில்கள்

இதற்கிடையே பெண் பயணிகளின் வசதியாக மேற்கு ரெயில்வேயில் 4 மகளிர் சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. இதன்மூலம் மேற்கு ரெயில்வேயில் தினசரி மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்து உள்ளது.

மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயை சேர்ந்து மொத்தம் 1,406 ரெயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வந்தது. மகளிர் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை கூடுவதால் தினசரி சேவை எண்ணிக்கை 1,410 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story