ஆலங்குளம் அருகே பயங்கரம்: தாயை கொன்று மகன் தீக்குளிப்பு


ஆலங்குளம் அருகே பயங்கரம்: தாயை கொன்று மகன் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2020 5:30 AM IST (Updated: 22 Oct 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே தாயை கொன்று விட்டு மகன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 48). இவர்களுக்கு மாரிச்செல்வம் (28), மணிரத்னம் (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் தனது மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் இசக்கியம்மாள் பீடிச்சுற்றியும், தோசை மாவு விற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

படுகொலை

இதில் மாரிச்செல்வம் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும், மணிரத்னம் ஊரில் கூலிவேலையும் செய்து வந்தனர். இதனால் வீட்டில் இசக்கியம்மாள், மணிரத்னம் ஆகியோர் மட்டுமே இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மணிரத்னம் காயம் அடைந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் இசக்கியம்மாள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு மணிரத்னம் வந்தார். அவர் திடீரென்று அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து பெற்ற தாய் என்றும் பாராமல் இசக்கியம்மாள் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

மகன் தீக்குளிப்பு

பின்னர் வீட்டின் சமையலறைக்கு சென்ற மணிரத்னம் அங்கு இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு கண்ட காட்சியை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மணிரத்னம் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மணிரத்னத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும், கொலை செய்யப்பட்ட இசக்கியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன் கைவிட்ட நிலையில் பீடித்தொழில், தோசைமாவு விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்த இசக்கியம்மாளை அவரது மகனே கொலை செய்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலங்குளம் அருகே தாயை கொன்று விட்டு மகன் தீக்குளித்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story