தஞ்சை கரந்தையில் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல் - போலீசார் சமரச பேச்சுவார்த்தை + "||" + Opposition to setting up a Tasmac store in Tanjore; Public Road Stir - Police Negotiate
தஞ்சை கரந்தையில் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல் - போலீசார் சமரச பேச்சுவார்த்தை
தஞ்சை கரந்தையில் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கரந்தையில் புதிதாக டாஸ்மாக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மெயின் சாலை பகுதிக்கு வந்தனர். அவர்கள் கரந்தையில் டாஸ்மாக்கடை அமைக்கக்கூடாது எனக்கூறி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கரந்தை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இல்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக இருந்து வந்தோம். இந்த நிலையில் டாஸ்மாக்கடை அமைப்பதால் மெயின் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும். மேலும் இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. மீறி அமைத்தால் போராட்டம் நடத்துவோம்”என்றனர்.
போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் தஞ்சை- கும்பகோணம் சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.