பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு: கோவையில், வாலிபர் குத்திக்கொலை - ஆட்டோ டிரைவர் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு
பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை தொட்டிப்பாளையம் பூபதி நகரை சேர்ந்தவர் இளங்கோவன். லேத் பட்டறை உரிமையாளர். இவர் வாகனங்களின் ஆர்.சி.புத்தகத்தை அடமானமாக வாங்கிக் கொண்டு கடன் கொடுத்தும் வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் (23) என்ற ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவின் ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.10 ஆயிரம் பணத்தை 2 நாட்களுக்கு முன்பு மைக்கேல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இளங்கோவனின் தாயார் நேற்றுக்காலை மைக்கேலுக்கு போன் செய்து நீங்கள் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயில் பணம் குறைகிறது என்று கேட்டுள்ளார். இதில் மைக்கேலுக்கும் இளங்கோவனின் தாயாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் மைக்கேலுக்கும் இளங்கோவனுக்கும் இடையில் செல்போனிலேயே ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல் சிலரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு இளங்கோவன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல் தான் வைத்திருந்த கத்தியால் இளங்கோவனை குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதை தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த சவுந்தர் (24) மற்றும் கிருபாகரன், அருண் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. அதன்பின்னர் மைக்கேல் மற்றும் திருநங்கைகள் 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த சவுந்தர் உள்பட 4 பேரையும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சவுந்தருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்த அவரை சிகிச்சைக்காக கோவை -அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சவுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து போன சவுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்தனர். தற்போது சவுந்தர் இறந்து விட்டதால் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் மைக்கேல் மற்றும் 5 திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story