பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர் கைது - உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் சிக்கினார்


பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர் கைது - உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் சிக்கினார்
x
தினத்தந்தி 22 Oct 2020 11:30 AM IST (Updated: 22 Oct 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போக்குவரத்து கழக முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியையும் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 55). அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர். இவரது மனைவி அய்யம்மாள் (55). இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தங்கவேல் அவரது மனைவி அய்யம்மாளை தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பள்ளியில் விடுவதும், பின்னர் மாலையில் திரும்பி அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவியை தங்கவேல், அதே பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

இதற்கிடையில் அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியையான அய்யம்மாளிடம் சென்று, நடந்ததை கூறியதாக தெரிகிறது. இதை கேட்ட அய்யம்மாள் மாணவியை அடித்து உள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் இதை சொல்ல கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளார். இந்த நிலையில் மாணவி பெற்றோரிடம் அந்த பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை. வேறு பள்ளிக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து பெற்றோரும் பள்ளிக்கு சென்று மாற்று சான்றிதழ் கேட்டனர். அப்போது எதற்காக வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியை பெற்றோரிடம் கேட்டு உள்ளார். இதை அறிந்த மாணவி பயத்தில் பெற்றோரிடம் தங்கவேல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த கோவை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் பொள்ளாச்சிக்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் அடித்தல், மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.

மேலும் மாணவி தகவல் தெரிவித்தும் சம்பவத்தை மறைந்து, அதற்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை அய்யம்மாளையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை உடந்தையாக இருந்ததும், அவரது கணவர் கைதான சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story