ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு: வாலிபரை ஆட்டோவில் கடத்திய 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபரை ஆட்டோவில் கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி திருப்பைஞ்சீலியை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). டிரைவர். இவர் திருவானைக்காவல் சீனிவாசநகரில் உள்ள தனது நண்பர் தினேஷ் உடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் திருவானைக்காவலில் உள்ள ஒரு மண்டபம் அருகே ராகுலும், தினேஷும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென ராகுலை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர், ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் ராகுலை கடத்தி சென்ற ஆட்டோவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் 2 மணி நேரத்துக்குப்பிறகு அந்த கும்பல் ராகுலை ஓரிடத்தில் இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து ராகுலை மீட்ட ஸ்ரீரங்கம் போலீசார் அவரை கடத்திச் சென்ற கும்பல் பற்றி விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக ராகுலின் சகோதரர் கோகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இதுபற்றி அறிந்த எதிர்தரப்பினர் கோகுலை பழிவாங்கும் நோக்கத்தில் ராகுலை கடத்தி சென்று அவர் இருக்கும் இடம் பற்றி அடித்து விசாரித்துள்ளனர். ஆனால் கோகுல் இருக்கும் இடம் தெரியாததால் அவரை ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றனர்“ என்று கூறினர்.
இந்த சம்பவம் குறித்து திலீப், பரணிதரன், கிருஷ்ணகுமார், விஜயகுமார், சிவா, சத்யா உள்ளிட்ட 6 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story