திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு மருத்துவ பரிசோதனை


திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 22 Oct 2020 10:55 AM GMT (Updated: 2020-10-22T16:25:58+05:30)

திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள், போலீசார் உள்பட ஏராளமானவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற அரசு அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இவர்கள் 4 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கிடையே வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற அரசு ஊழியர்கள் 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களது பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும். அதுவரை அரசு ஊழியர்களை கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story