அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 22 Oct 2020 12:45 PM GMT (Updated: 22 Oct 2020 12:45 PM GMT)

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அண்ணாமலைநகர்,

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியலை துணைவேந்தர் முருகேசன் வெளியிட, பதிவாளர் ஞானதேவன் பெற்றுக்கொண்டார். இதில் வேளாண்புல முதல்வர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குநர், மாணவர் சேர்க்கை ஆலோசகர், மற்றும் வேளாண்புல துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வேளாண் புலத்தில் 8,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 8,346 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 21 நபர்கள் மாற்றுத்திறனாளிகள். இதுபோல வேளாண் புலத்தில் உள்ள சுயநிதிப் பிரிவில் 2,815 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 2,727 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தோட்டக்கலையில் சேர்வதற்கு 1,669 மாணவர்கள் விண்ணப்பித்து அதில் 1,628 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதைத்தவிர, தோட்டக்கலை மற்றும் விவசாய துறைகளுக்கான பட்டய படிப்பிற்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் வேளாண்துறையில் வெள்ளக்கோவில் ஊரைச் சேர்ந்த சுவாதி 197.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீமதி 196 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், சிதம்பரத்தை சேர்ந்த அபிராம ஸ்ரீ 193 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

வேளாண்துறை சுயநிதி பிரிவில் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீமதி 196 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கும்பகோணத்தை சேர்ந்த அபி ராகுல் 190 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், கரிமங்கலத்தை சேர்ந்த சன்மதி 189 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதுபோலவே, தோட்டக்கலைத் துறையில் காளையார்கோவிலை சேர்ந்த அல்பினா 192 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஈரோட்டை சேர்ந்த கவிந்தரன் 197 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், திருவட்டாரை சேர்ந்த தர்ஷினி 189.5 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். இதற்கான விவரங்கள் 2 நாட்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிட்டு அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்பட மாட்டாது.

மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story