பணியின் போது மரணம்: வேலூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை


பணியின் போது மரணம்: வேலூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
x
தினத்தந்தி 22 Oct 2020 7:25 PM IST (Updated: 22 Oct 2020 7:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில், பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

வேலூர்,

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி வேலூர் ஆயுதப்படை தலைமையகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை நாடு முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் சரக டி.ஐ.ஜி.காமினி, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூடுதல் சூப்பிரண்டு மதிவாணன் (தலைமையகம்) மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் உயிர் நீத்த மற்றும் தியாகம் செய்த வீர மரணங்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அத்துடன் துப்பாக்கி குண்டுகள் முழங்கவும் அவர்களுக்கு மரியாதையும், 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேசுகையில், இந்திய நாட்டில் தேசத்துக்காக பணியின் போது உயிரிழந்த 264 காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது என்றார்.

இந்த நாளை முன்னிட்டு போலீசார் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story