சூளகிரி அருகே பரபரப்பு: கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை - டிரைவர்களை தாக்கி மர்ம கும்பல் கைவரிசை


சூளகிரி அருகே பரபரப்பு: கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை - டிரைவர்களை தாக்கி மர்ம கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 22 Oct 2020 8:26 PM IST (Updated: 22 Oct 2020 8:26 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே டிரைவர்களை தாக்கி, கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

ஓசூர்,

சென்னை பூந்தமல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு நேற்று முன்தினம் மதியம் 15 அட்டை பெட்டிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவன செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக கோவையை சேர்ந்த அருண் (26) என்பவர் உடன் வந்தார்.

இந்த கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் மற்றொரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை திடீரென வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பல், டிரைவர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர்களது கை, கால்களை கட்டி சாலையோர புதரில் போட்டு விட்டு கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றது.

இந்த நிலையில் புதரில் கிடந்த டிரைவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டனர். இதையடுத்து டிரைவர்கள் 2 பேரும் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கன்டெய்னர் லாரியில் 15 பெட்டிகளில், 14,576 செல்போன்கள் இருந்ததாகவும், இவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்பதும், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை வழிமறித்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே செல்போன்களுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி, சூளகிரியை அடுத்த அழகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது லாரியில் செல்போன்கள் எதுவும் இல்லை என்பதும், அந்த கும்பல் அவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை மடக்கி டிரைவர்களை தாக்கி ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story