மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற அரசின் எண்ணம் நிறைவேறும்


மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற அரசின் எண்ணம் நிறைவேறும்
x
தினத்தந்தி 23 Oct 2020 3:18 AM IST (Updated: 23 Oct 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் எண்ணம் நிறைவேறும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர், 

கோபி நகராட்சிக்கு உள்பட்ட 11-வது வார்டில் உள்ள அய்யப்பா நகர் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும் அதே பகுதியில் புதிய ஆழ்குழாய் கிணற்றுடன் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து ஓலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த விழாவில், 185 நெசவாளர்களுக்கு பாதுகாப்பு அட்டைகளை வழங்கினார்.

அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு...

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறார். மன்னர் ஆட்சிக்கு பிறகு இந்த ஆட்சியில் தான் குடிமராமத்துப் பணிகள் நடந்துள்ளது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் மழைநீரால் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் தொழில் தொடங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏழை மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இந்த ஆட்சியில் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக அரசு சார்பில் 412 மையங்களில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசு பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஒரு மாணவர் 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவ படிப்பில் விரைவில் இடம் கிடைக்கும்.

நிறைவேறும்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக 412 மையங்களுக்கு ரூ.57 லட்சம் அரசு சார்பில் செலவு செய்யப் பட்டுள்ளது. வருங்காலங்களில் நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் எண்ணம் நிறைவேறும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தியாகராஜன், நகரச் செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story