தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கு: கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி திகில் படம் பார்ப்பது போல உள்ளது


தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கு: கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி திகில் படம் பார்ப்பது போல உள்ளது
x
தினத்தந்தி 23 Oct 2020 4:30 AM IST (Updated: 23 Oct 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகரில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில், சம்பந்தப்பட்ட கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, 

சென்னை தியாகராயநகர் சாருல்லா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து, அதில் உத்தம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை மொத்த வியாபார கடையை நடத்தி வந்தார். தங்க-வைர நகைகளை செய்து நகைக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூட்டை உடைத்து இவரது கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளைக்கார ஆசாமி, கடையில் இருந்த 5 கிலோ எடையுள்ள தங்க, வைர நகைகள் மற்றும் தங்க, வெள்ளிக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், தென்சென்னை இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகியோர் போலீஸ் படையுடன் கொள்ளைபோன கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொள்ளை ஆசாமி பற்றி துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில், சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 120 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 40 கேமராக்களில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை சேகரித்து போலீசார் வீடியோவாக தயாரித்துள்ளனர். 45 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காட்சி, சினிமாவில் திகில் படத்தைப்பார்ப்பது போல பரபரப்பாக உள்ளது.

வீடியோவின் தொடக்கத்தில் கொள்ளை நடந்த மூசா தெருவுக்கு பின்பக்க தெருவில் 2 கொள்ளையர்கள் இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார்கள். நகைக்கடைக்குள் சென்ற கொள்ளை ஆசாமி மட்டும் மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குகிறார். இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிடுகிறார்.

இறங்கிய நபர், நகைக்கடை உள்ள வீட்டை நோக்கி மெதுவாக நடந்து வருகிறார். அவர் முகத்தை துணியால் மூடி இருந்தார். இரண்டு கைகளிலும் உறை அணிந்திருந்தார். நகைக்கடை உள்ள வீட்டின் பின்பக்க மதில் சுவரில் ஏறி, காம்பவுண்டுக்குள் குதிக்கிறார்.

நகைக்கடைக்குள் பெரிய அளவில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டவர் போல, அதை அள்ளிச்செல்ல பெரிய பை ஒன்றை அவர் கையில் வைத்துள்ளார். சரியாக 11.30 மணிக்கு பூட்டை உடைத்து நகைக்கடைக்குள் செல்கிறார்.

கடையில் உள்ள ஒரு லாக்கரை உடைக்கிறார். தங்க புதையல் கிடைத்ததுபோல, அதற்குள் இருந்த தங்க-வைர நகைகள் மற்றும் தங்கம், வெள்ளிக்கட்டிகளை வாரி வாரி பைக்குள் போடுகிறார். கிட்டத்தட்ட பை நிரம்பி விடுகிறது. அதற்கு பிறகும் பேராசையால் இன்னொரு லாக்கரை உடைக்கிறார். அதை உடைக்க முடியவில்லை. சுமக்க முடியாமல், நகைகள் உள்ள பையை கஷ்டப்பட்டு தூக்கி செல்கிறார். நள்ளிரவு 1.30 மணிக்கு நகைக்கடையை விட்டு வெளியேறுகிறார். பின்னர் வந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய தெருவுக்கு 2 மணியளவில் வந்து விடுகிறார்.

அதிகாலை 4 மணிவரை தெரு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார். 4 மணி அளவில் இறக்கி விட்ட கொள்ளை ஆசாமி மீண்டும் வந்து, மோட்டார் சைக்கிளில் காத்திருந்த கொள்ளை ஆசாமியை அழைத்து சென்று விடுகிறார். இதுதான் கொள்ளை சம்பவத்தை காட்டும் வீடியோ காட்சி.

கொள்ளையர்கள் இருவர் பற்றியும் துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Next Story