கவர்னர் கிரண்பெடியுடன் மாநில தேர்தல் ஆணையர் சந்திப்பு உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆதரவு தருவதாக உறுதி
கவர்னர் கிரண்பெடியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆதரவு தருவதாக கவர்னர் கிரண்பெடி உறுதியளித்தார்.
புதுச்சேரி,
புதுவை மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி.தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி மரியாதை நிமித்தமாக கவர்னர் கிரண்பெடியை நேற்று சந்தித்து பேசினார். நாடு தழுவிய தேர்வு செயல்முறை மூலம் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவருக்கு கவர்னர் கிரண்பெடி வாழ்த்து தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு அரசின் அனைத்து ஆதரவையும் தருவதாக அவரிடம் கவர்னர் கிரண்பெடி உறுதி அளித்தார். அப்போது கவர்னரின் தனி சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ், அரசு செயலாளர் ஜெயந்தகுமார் ரே ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் ராய் பி.தாமசுக்கு தெரியும். சட்டம் மற்றும் வணிக முகாமைத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த 2018-ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அதன்பின் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
புதிய மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
10 ஆண்டுகளாக...
கோர்ட்டு தீர்ப்புகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் நிர்வாகியால் அங்கீகரிக்கப்பட்ட முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொது அதிகாரியால் நடத்தப்படும் என்பதை உறுதி செய்கிறது. புதுவை மக்கள் அடிமட்ட ஆட்சியை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்கும், நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் இது வாய்ப்பு தருகிறது.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சில முடிவுகளை எடுக்கிறார் கள். கடன் வாங்கிய பணத்தில் கட்டப்பட்ட பல பொதுசேவைகள் பயனற்றவையாகவும், பயன்படுத்தப்படாமலும் உள்ளன. தண்ணீர் தொட்டிகள் சரியான நேரத்தில் சுத்தம் செய்யப்படுவதில்லை. நூலகங்களில் போதிய புத்தகம் இல்லை. பாடசாலைகளில் பாடங் களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் வெளியே செல்கின்றனர்.
தேர்தல் பணி
கழிவுநீரால் குளங்கள் பாதிக்கப்பட்டன. தூர்வாருவது சரியான நேரத்தில் நடப்பதில்லை. இதனால் விலை மதிப்பற்ற மழைநீர் வீணடிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் திருடப்பட்டு நில உரிமையாளர்களால் டேங்கர்களுக்கு விற்கப்படுகிறது. பஞ்சாயத்துகள் அமைந்தால் கிராமப்புற நிர்வாகத்தில் பெண்கள் பங்கெடுப்பார்கள். இப்போது அது இல்லை. மணல் திருட்டு, நில அபகரிப்பு போன்றவை பொதுப்பார்வையில் வரும். புதுச்சேரிக்கு இப்போது ஜனநாயகம் திரும்பியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்தில் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கவேண்டும். இது புதுவை நிர்வாக பணிக்கான தீபாவளி பரிசு.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story