வில்லிவாக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு தடுக்க முயன்றவரும் படுகாயம்
வில்லிவாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரரை காலால் எட்டிஉதைத்ததால் அவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
செங்குன்றம்,
சென்னை வில்லிவாக்கம் வடக்குமாட வீதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 24). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இளவரசன், அடிக்கடி குடிபோதையில் மனைவியை தாக்கி வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இளவரசன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து விஜயலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரிவாள் வெட்டு
உடனடியாக வில்லிவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி(53) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குடும்பத் தகராறு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி விசாரித்துகொண்டிருந்தார்.
அப்போது இளவரசன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணியின் இடது கை மணிக்கட்டில் வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
கைது
இதை தடுக்க முயன்ற இளவரசனின் பக்கத்து வீட்டுக்காரர் கதிர்வேல் என்பவரை காலால் எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்த அவரும் படுகாயம் அடைந்தார். சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவரும் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story