வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடம் மாற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா


வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடம் மாற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா
x
தினத்தந்தி 22 Oct 2020 10:30 PM GMT (Updated: 23 Oct 2020 2:10 AM GMT)

வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடம் மாற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று மதியம் ஒன்று சேர்ந்து வந்து பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கடந்த 10 மாதமாக ஊராட்சி மன்ற தலைவர்களை சுதந்திரமாக பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகிறார். மேலும் எங்களை ஒருமையில் பேசி வருகிறார். எங்களுடைய அதிகாரங்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.

அவர் வளர்ச்சி திட்ட பணிகளை எங்களுக்கு ஒதுக்க மறுக்கிறார். எனவே வட்டார வளர்ச்சி அலுவலரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம், என்றனர்.

பின்னர் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மருதாம்பாள் செல்வகுமார், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட சிலர் கலெக்டர் சாந்தாவை சந்தித்து மனு கொடுப்பதற்காக அலுவலகத்து உள்ளே நுழைந்தனர். அப்போது கலெக்டர் சாந்தா தனது அலுவலகத்தில் இருந்து முகாம் அலுவலகத்துக்கு செல்வதற்கு காரில் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் கலெக்டர் சாந்தா மனுவினை வாங்காமல், மனுவினை மேல்தளத்தில் உள்ள தனது நேர்முக உதவியாளர் அல்லது உதவி இயக்குனரிடம் (ஊராட்சிகள்) கொடுத்து விட்டு செல்லுமாறு கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.

இந்நிலையில் மனுவினை கலெக்டர் வாங்காமல் தங்களை அவமதித்ததாகவும், கலெக்டரிடம் தான் மனுவை கொடுப்போம் என்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் நேரில் வந்து, ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவதாக கூறியதை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் அவரிடம் மனுவினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர்களின் தர்ணா போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story