செந்துறையில், கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு


செந்துறையில், கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 22 Oct 2020 10:15 PM GMT (Updated: 23 Oct 2020 2:19 AM GMT)

செந்துறையில் கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

செந்துறை, 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி முத்துலட்சுமி(வயது 33). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செந்துறை அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடிவந்தனர்.

தற்போது பழனிவேல் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அண்ணா நகரில் உள்ள வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி, பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற முத்துலட்சுமி இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவின் பூட்டு மற்றும் சாமி அறை கதவின் தாழ்ப்பாள் அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பையில் வைக்கப்பட்டு இருந்த நகை திருட்டு போனது தெரியவந்தது.

அந்த பையில் 48 பவுன் நகை வைத்திருந்ததாகவும், அதில் 13 பவுன் நகையை காணவில்லை என்றும் முத்துலட்சுமி கூறினார். இது குறித்து அவர் செந்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து செந்துறை போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story