திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’டில் சிக்கி தவித்த தாத்தா-பேரன் - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’டில் சிக்கி தவித்த தாத்தா-பேரன் - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 22 Oct 2020 10:00 PM GMT (Updated: 23 Oct 2020 3:12 AM GMT)

திருச்சி மேலசிந்தாமணி அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’டில் சிக்கித்தவித்த தாத்தா, பேரனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

திருச்சி,

திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் சாலையில் ‘காவேரி அபார்ட்மெண்ட்‘ என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 தளங்களை கொண்ட, அந்த குடியிருப்பில் 4-வது தளத்தில் சீனிவாசன் (வயது 62) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

சீனிவாசன் வீட்டிற்கு மருமகளும், அவரது 1¾ வயது குழந்தையான இர்வின்ராஜாவும் வந்திருந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் லிப்ட்டில் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை சீனிவாசன் தனது பேரன் இர்வின்ராஜாவை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் கடைவீதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், இரவு 7.30 மணிக்கு இருவரும் வீடு திரும்பினர். அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் உள்ள லிப்ட்-டை பயன்படுத்தி பேரனுடன் சீனிவாசன் 4-வது தளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த லிப்ட் பழைய மாடல் வகையை சேர்ந்தது. அதாவது 2 இரும்பு கிரீல் கம்பிகள் பொருத்தப்பட்ட கதவுகள் மட்டும் லிப்டில் இருந்தது. தேவையான தளத்திற்கு வந்ததும் 2 இரும்பு கிரீல் கம்பி கதவுகளையும் ஒருபுறம் தள்ளிவிட்டு வெளியே வரவேண்டும். லிப்ட்டில் மேலே வரும் வேளையில் குழந்தை இர்வின் ராஜா, கிரீல் கதவின் இடையில் காலை வைத்து விட்டான். இதனால், லிப்ட் இயங்காமல் அப்படியே நின்று விட்டது. உள்ளே தாத்தா சீனிவாசன் தவித்து கொண்டு செய்வதறியாது திகைத்தார். பேரக்குழந்தையோ, லிப்ட் கிரீல் கதவில் கால் சிக்கி கொண்டதால் வீறிட்டு அழத்தொடங்கினான்.

மேலும் பதற்றத்தில் சீனிவாசன், உள்ளே இருந்த லிப்ட் இயக்கும் பொத்தானை மீண்டும், மீண்டும் அழுத்தியதால் அது மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்பவர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டும் முடியவில்லை. உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நிலைய அலுவலர் மெல்கியூராஜா தலைமையிலான 5 தீயணைப்பு வீரர்கள் வண்டியில் உரிய ‘டோர் பிரேக்கர்’ கருவிகளுடன் விரைந்து வந்தனர். அவர்கள், கிரீல் கதவின் கம்பிகளை டோர்பிரேக்கர் கருவி மூலமாக விரிவுப்படுத்தி குழந்தையை மீட்டனர். லிப்ட் இரும்பு கம்பிகள் அழுத்தியதில் குழந்தை இர்வின் ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக சிறுவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான். உரிய நேரத்தில் வந்து தாத்தா, பேரனை மீட்ட தீயணைப்பு படையினரை குடியிருப்பு வாசிகள் பாராட்டினர்.

Next Story