திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,030 வாக்குச்சாவடி மையங்கள் - கலெக்டர் சிவன்அருள், பட்டியலை வெளியிட்டார்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,030 வாக்குச்சாவடி மையங்கள் - கலெக்டர் சிவன்அருள், பட்டியலை வெளியிட்டார்
x
தினத்தந்தி 23 Oct 2020 7:20 PM IST (Updated: 23 Oct 2020 7:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சிவன்அருள் வெயிட்டார். அதன்படி 1,030 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் சிவன்அருள் வாக்குச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்கள் உள்ளதால் கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் வழிமுறைகளை அறிவித்துள்ளது. 1,500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றுதல், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி பெயர் மாற்றப்பட்டு இருப்பின் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,030 வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரையின்படி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, கடந்த ஆண்டுகளில் அரசியல் கட்சிகள், பொது மக்களின் கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து, மாறுதல் முன்மொழிவு அனுப்பி வைத்ததன் பெயரில் அவை மாற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது.

அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் யாருக்காவது ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தாங்கள் எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட ஏழு தினங்களுக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், உதவி கலெக்டர் அப்துல் முனிர், தேர்தல் தாசில்தார் பழனி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி. ரமேஷ், சூரியகுமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரபு மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story