மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? கலெக்டர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்


மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? கலெக்டர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்
x
தினத்தந்தி 23 Oct 2020 3:59 PM GMT (Updated: 23 Oct 2020 3:59 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ராமன் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி மழையின்போது வெள்ளம் சேதம் ஏற்பட்டால் அதை தடுப்பது எப்படி? தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைத்து தீயில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பது குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் விழிப்புணர்வு சுவரெட்டி மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட கல்வி அலுவலர் சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர்கள் முருகேசன், சிவக்குமார் ஆகியோர் பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்டால் நவீன கருவிகள் மூலம் மக்களை காப்பாற்றுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களின்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீ விபத்துகளின்போது எவ்வாறு அதனை எதிர்கொண்டு விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது ஆகியவை குறித்து செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.அதாவது, அதிகமான மழை பெய்யும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டு அவர்களை உயிருடன் பாதுகாப்பாக மீட்பது குறித்தும், நிலநடுக்கம், வெள்ளம் போன்றவையால் இடிபாடுகளில் சிக்கியவர்களை நவீன எந்திரங்களை பயன்படுத்தி உயிருடன் மீட்பது பற்றியும் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு ஒத்திகை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்டது.

மேலும், குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கிருக்கும் தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைப்பது பற்றியும் விளக்கம் கூறப்பட்டது. இதையொட்டி தீயணைப்புத்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், சேலம் உதவி கலெக்டர் மாறன், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) பத்மபிரியா, தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன் (சேலம்), பிரகாஷ் (சேலம் மேற்கு), ரமேஷ்குமார் (சேலம் தெற்கு), தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள் கலைச்செல்வன், மணிவண்ணன் உள்பட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story