ஊட்டி ரோஜா பூங்காவில் கம்பி வலைகள், கற்களை கொண்டு தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடக்கம் - மண் சரிவை தடுக்க நடவடிக்கை


ஊட்டி ரோஜா பூங்காவில் கம்பி வலைகள், கற்களை கொண்டு தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடக்கம் - மண் சரிவை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2020 9:35 PM IST (Updated: 23 Oct 2020 9:35 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ரோஜா பூங்காவில் மண் சரிவை தடுக்கும் நடவடிக்கையாக கம்பி வலைகள், கற்களை கொண்டு தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

ஊட்டி,

ஊட்டி ரோஜா பூங்காவில் கனமழை காரணமாக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மண் சரிவு தொடர்ந்து வந்தது. இதனால் பூங்காவின் நடைபாதை துண்டிக்கப்படும் அபாயம் நிலவியது. இந்த நிலையில் மண் சரிவை தடுக்க புதிய தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தோட்டக்கலை துறை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கி, மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

முன்னதாக பழைய தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கிடந்த மண், கற்கள் அகற்றப்பட்டு, தேவையான அளவு குழி தோண்டப்பட்டது. பின்னர் கற்களால் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இடைவெளி இல்லாமல் பெரிய கற்கள் மற்றும் சிறிய கற்களை கொண்டு கட்டப்படுவதோடு, புதிய தொழில்நுட்பமாக கற்களை சுற்றிலும் கம்பி வலைகள் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம் நாளடைவில் கற்களை மண் மூடி விடுவதால், கற்களை மண் நன்றாக இறுக்கி பிடித்து விடுகிறது. மழைநீர் பெருக்கெடுத்தாலும் கற்களுக்கு இடையே உள்ள இடுக்குகள் வழியாக வெளியேறி விடும். காலப்போக்கில் மண்ணும், கற்களும் இறுகி விடுவதால் மண்சரிவு ஏற்படுவது மற்றும் தடுப்புச்சுவர் இடிந்து விழுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் புதிய தொழில்நுட்பத்தோடு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. 12 மீட்டர் அகலம், 11 மீட்டர் உயரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது. முதலில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் உள்ள மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர் மற்றொரு பகுதியில் தடுப்புச்சுவர் எழுப்பப்படுகிறது. மலைச்சரிவு என்பதால் பூங்கா முன்பகுதியில் இருந்து தொழிலாளர்கள் தலைச்சுமையாக கற்களை கொண்டு வந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story