சிக்கி தவித்த 300 பேர் மீட்பு; 3,500 பேர் வெளியேற்றம் வணிக வளாகத்தில் பிடித்த தீயை அணைக்க 2-வது நாளாக போராட்டம்


சிக்கி தவித்த 300 பேர் மீட்பு; 3,500 பேர் வெளியேற்றம் வணிக வளாகத்தில் பிடித்த தீயை அணைக்க 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2020 9:25 PM GMT (Updated: 23 Oct 2020 9:25 PM GMT)

நாக்பாடாவில் உள்ள வணிக வளாகத்தில் பிடித்த தீயை அணைக்க நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 5 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.

மும்பை, 

மும்பை சென்ட்ரல் அருகே நாக்பாடா பகுதியில் சிட்டி சென்டர் மால் என்ற வணிக வளாகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வணிக வளாகத்தின் 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் ஏராளமான வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வணிக வளாகத்தில் சிக்கி இருந்த 300 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் வணிக வளாகத்தையொட்டி உள்ள 55 மாடி கொண்ட ஆர்சிட் கட்டிடத்தில் வசித்த 3 ஆயிரத்து 500 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் சாலையில் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

2-வது நாளாக போராட்டம்

சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் இணைந்து வணிக வளாகத்தில் பற்றி எரிந்த தீயை நாலாபுறமும் சுற்றி நின்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நேற்று 2-வது நாளாக இரவு வரையிலும் நீடித்தது. இந்த தீ விபத்தில் ஒரு அதிகாரி உள்பட 5 தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தினால் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

Next Story