ஆயுதபூஜையையொட்டி தஞ்சையில், பூக்கள் விலை உயர்வு - நாளை வரை 24 மணி நேரமும் பூ மார்க்கெட் செயல்படும்


ஆயுதபூஜையையொட்டி தஞ்சையில், பூக்கள் விலை உயர்வு - நாளை வரை 24 மணி நேரமும் பூ மார்க்கெட் செயல்படும்
x
தினத்தந்தி 24 Oct 2020 4:00 AM IST (Updated: 24 Oct 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்தது. நாளை வரை 24 மணி நேரமும் பூ மார்க்கெட் செயல்படும்.

தஞ்சாவூர்,

ஆயுத பூஜை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளிலும் பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்வது வழக்கமாகும்.

இதன் காரணமாக பூக்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் தஞ்சை பூ மார்க்கெட்டிற்கு நேற்று வந்தனர். தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டில் 60 கடைகள் உள்ளன. பூ மார்க்கெட்டுக்கு ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தஞ்சை பூ மார்க்கெட்டில் இருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம், அறந்தாங்கி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி பூ மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதலே பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. பூக்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து பூ வியாபாரிகள் மினி லாரிகளுடன் வந்திருந்து இரவு முதலே காத்திருந்தனர். அவர்கள் நேற்று காலை பூக்களை ஏலத்தில் எடுத்து தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்றனர். வழக்கமான நாட்களை விட ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை அதிகரித்து இருந்தது.

வழக்கமான நாட்களை விட ஆயுத பூஜையையொட்டி நேற்று பூக்கள் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் மல்லிகைப்பூ, முல்லைப்பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மல்லிகைப்பூ, முல்லைப்பூ ரூ.600-க்கு விற்பனையானது. கனகாம்பரம் தொடர்ந்து ரூ.1,000-க்கு விற்பனையாகி வருகிறது. ரூ.400-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.500-க்கும், ரூ.120-க்கு விற்ற செவ்வந்தி ரூ.200-க்கும், ரூ.350-க்கு விற்ற அரளிப்பூ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செண்டிப்பூ, மருக்கொழுந்து விலையும் அதிகரித்து இருந்தது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பூக்களை வாங்கி செல்ல மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்றைய விலையை விட இன்று(சனிக்கிழமை) பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த பூ கட்டுவோர் பூக்களை வாங்கி செல்வதற்கு வசதியாக நேற்று முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை 24 மணி நேரமும் பூ மார்க்கெட் திறந்து இருக்கும் என பூ வியாபாரிகள் மற்றும் பூ கட்டுவோர் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த விவரத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகை பூ மார்க்கெட் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறுகையில், ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மக்களின் வசதிக்காக 3 நாட்கள் 24 மணி நேரமும் பூ மார்க்கெட் திறந்து இருக்கும். பூ மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மழை பெய்த காரணத்தினால் கனகாம்பரம் வரத்து மிக குறைவாக இருக்கிறது. அது காகித பூ போன்றது.

மழைக்கு தாக்குப்பிடிக்காது. மற்ற பூக்கள் ஓரளவு மழைக்கு தாக்குப்பிடிக்கும். பூக்கள் வரத்து அதிகமாக இருக்கிறது என்றார்.

Next Story