கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 27-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் - சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 27-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் - சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 9:45 PM GMT (Updated: 24 Oct 2020 3:10 AM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமது அலி கூறினார்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதைவிட ஆவின் பால் நிர்வாகம் நெருக்கடியில் உள்ளது. மேலும் ஆவின் நிறுவனம் நிர்வாக சீர்கேடுகளினால் கடுமையான நஷ்டத்தில் செயல்படுகிறது. எனவே ஆவினில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கியுள்ள, பால் உற்பத்தியாளர்களுக்கு 3 மாதங்கள் வரையிலான பாலுக்கான தொகையை வழங்காமல் சுமார் ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ளது. அந்த பாக்கி தொகை முழுவதையும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் வழங்க வேண்டும்.

தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் வழங்கியுள்ளவர்கள் அனைவருக்கும் போனஸ், ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். சமீபத்தில் மாவட்ட ஒன்றியங்களில் அளவுக்கு அதிகமாக அதிகாரிகளையும், அலுவலர்களையும் நியமித்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி ஆவினை பாதுகாத்திட வேண்டும்.

கொரோனாவினால் பாதித்துள்ள தற்போதைய சூழலிலாவது பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனங்களை வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையில் 1 லிட்டருக்கு ரூ.5 ஊக்க தொகையாக கூடுதலாக வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிற அண்ணா பொது நல நிதியை, பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண உதவி தொகையாக வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் வருகிற 27-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆவினை பாதுகாப்போம், பால் உற்பத்தியாளர்களை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் கலெக்டர் அலுவலகம் முன்பாகவும், ஆவின் அலுவலகம் முன்பாகவும் பால் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சங்கத்தின் மாநில செயலாளர் செல்லத்துரை, துணைச் செயலாளர் ராமநாதன், கடலூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story