தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 113-வது தேவர் ஜெயந்தி மற்றும் 58-வது தேவர் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் முன்னிலை வகித்தார். கலெக்டர் கண்ணன் சமுதாய தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
மரியாதை செலுத்த செல்ல விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல்) ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் வருகிற 26-ந் தேதிக்குள் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அத்துடன் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த வேண்டும். மரியாதை செலுத்த செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்று திரும்ப வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் பொது மக்களின் நலன் கருதி 30-ந் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த செல்வதற்கு அனுமதி இல்லை.
மரியாதை செலுத்த சொந்த வாகனங்களில் செல்பவர்கள் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், வாகன பதிவு எண், வாகன அனுமதி பற்றிய விவரம் மற்றும் செல்லும் வழித்தடம் ஆகியவற்றை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனம், வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.
வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி செல்லவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. பொது இடங்களில் உருவ படங்களை வைத்து மரியாதை செலுத்த அனுமதி இல்லை. சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. ஜோதி, முளைப்பாரி, பால்குடம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சப்-கலெக்டர் (சிவகாசி) தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story