கடல் நீரோட்ட வேகத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க அரிச்சல்முனை சாலை வளைவை பலப்படுத்தும் பணி தீவிரம்
கடல் நீரோட்ட வேகத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க அரிச்சல்முனை சாலை வளைவை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கடல் பகுதி. தனுஷ்கோடி கடல் பகுதி இயற்கையாகவே கடல் சீற்றமாக உள்ள பகுதியாகும். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு கடல் நீர்மட்டம் தொடர்ந்து மிக அதிகமாக இருந்து வருகிறது.கடல் நீரோட்டத்தின் வேகத்தால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றி இருபுறமும் மணல் பரப்பாக இருந்த பகுதிகள் முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளன.
கடல் நீரோட்ட வேகத்தால் அரிச்சல்முனை சாலை வளைவில் சுற்றி இருந்த தடுப்புச்சுவர் கற்களும் முழுமையாக சேதமடைந்து சாலை வரை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் கடல் நீரோட்ட வேகத்தால் சாலை வளைவில் சுற்றியுள்ள தடுப்புச்சுவர் மற்றும் சாலையும் மேலும் சேதமாகாமல் இருக்கும் வகையில் தடுப்புச் சுவரை சுற்றிலும் ஏராளமான கற்கள் கொட்டப்பட்டு அந்த பகுதி முழுவதும் பலப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.
இதற்காக பெரிய பெரிய கற்கள் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து கனரக லாரிகள் மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஆண்டு இதே மாதம் அரிச்சல்முனை சாலையைச் சுற்றி இருந்த பகுதிக்கும் தற்போது உள்ள அந்த பகுதிக்கும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story