4 வழிச்சாலையில் உலாவும் காட்டெருமைகள்


4 வழிச்சாலையில் உலாவும் காட்டெருமைகள்
x
தினத்தந்தி 24 Oct 2020 11:30 AM IST (Updated: 24 Oct 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் காட்டெருமைகள் உலாவுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தொடங்கி விராலிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, தாடகை நாச்சிபுரம், கரடிக்கல், தெத்தூர், மேட்டுப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்கள் சிறுமலை அடிவாரத்தில் உள்ளது.

இதனால் சிறுமலை வனப்பகுதிகளில் வசிக்கும் காட்டு எருமைகள், காட்டுப்பன்றிகள், மிளா, மான்கள், நரிகள், ஓநாய்கள், செம்பூத்துகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் சில நேரங்களில் மலையோர கிராம பகுதிகளில் இறங்கி வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம்.

இதில் காட்டுப்பன்றிகள் மலையடிவாரத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், கம்பு, கரும்பு, நெல் பயிர், வாழை உள்ளிட்ட பலவகை பலன் தரும் பயிர் வகைகளை சேதப்படுத்திவிட்டு சென்று விடும்.

மேலும் இந்த காட்டு விலங்குகள் தரைமட்ட கிணறு பகுதிகளில் அடிக்கடி விழுந்து தவிப்பதும், அதை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டு வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவதும் வாடிக்கையான ஒன்றாகும்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஜவுளி பூங்கா எதிரில் நான்கு வழிச்சாலையை காட்டெருமை ஒன்று கடந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். தற்போது அந்தக் காட்டு எருமை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதா, தாதம்பட்டி கண்மாய் பகுதியில் கருவேலங்காட்டுக்குள் பதுங்கி இருக்கிறதா எனற சந்தேகத்தில் அந்த பகுதியில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டெருமையை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story