ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டியில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள் - ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை + "||" + Preceding the Armed Puja Sugarcane for sale in Ooty - A pack sells for Rs.800
ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டியில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள் - ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டியில் விற்பனைக்கு கரும்புகள் குவிந்தன. ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி,
தமிழகம் முழுவதும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்வது வழக்கம். அதன் பின்பு சிறப்பு பூஜை செய்து வாகனங்களுக்கு மாலை அணிவிக்கின்றனர். இதில் வாழைக்கன்று, பூக்கள், கரும்பு, மா இலை முக்கியமாக இடம்பெறும். நீலகிரி மாவட்டத்துக்கு ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான கரும்பு, வாழைக்கன்றுகள் போன்றவை சமவெளி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
அதேபோல் நடப்பாண்டிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து 3 லாரிகளில் கரும்புகள் ஏற்றப்பட்டு நேற்று காலை ஊட்டிக்கு வந்தது. அதனை மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டில் வரிசையாக இறக்கி அடுக்கி வைத்தனர். பின்னர் ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கி சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனங்களில் வந்து கரும்புகளை கட்டு, கட்டாக வாங்கி சென்றதை காண முடிந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு கரும்புகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். மலைப்பிரதேசம் என்பதால் சமவெளி பகுதியில் இருந்து லாரிகளில் கரும்புகளை கொண்டு வர அதிக செலவாகிறது. இதனால் அவ்வப்போது கரும்பு விலை உயர்ந்து வருகிறது. எனினும் ஊட்டியில் விலை உயரவில்லை. ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும், ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில் நகராட்சி மார்க்கெட்டில் வைத்து கரும்பு விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஏ.டி.சி.யில் உள்ள காந்தி மைதானத்தில் வைத்து கரும்பு விற்பனை செய்யப்படுகிறது.