திண்டுக்கல்லில், தி.மு.க. பிரமுகர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


திண்டுக்கல்லில், தி.மு.க. பிரமுகர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2020 10:40 PM IST (Updated: 24 Oct 2020 10:40 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). திண்டுக்கல் நகர தி.மு.க. வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் மேட்டுப்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் இரவு 8.30 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டினார். பின்னர் தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே சென்ற போது, ஒரு கார் வேகமாக வந்து அருண்குமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதையடுத்து காரில் இருந்து ஒரு கும்பல் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கியது. இதனை கண்டதும் அருண்குமார் எழுந்து ஓடினார். ஆனால், விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல், அருண்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அருண்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிளை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அருண்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அருண்குமாரை கொலை செய்தவர்களை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் மறுத்து விட்டனர். மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே அருண்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திண்டுக்கல்- திருச்சி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இருபக்கத்திலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அருண்குமாரின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கொலையாளிகளை விரைவில் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிஅளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு அருண்குமாரின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story