பாலாற்றின் குறுக்கே பழையசீவரத்தில் கட்டப்படும் தடுப்பணையை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை


பாலாற்றின் குறுக்கே பழையசீவரத்தில் கட்டப்படும் தடுப்பணையை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Oct 2020 5:15 AM IST (Updated: 25 Oct 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

பாலாற்றின் குறுக்கே பழையசீவரத்தில் கட்டப்படும் தடுப்பணையை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்தார்.

அதில், 3-வது தடுப்பணை தற்பொழுது வாலாஜாபாத் வட்டம், உள்ளாவூர் (பழையசீவரம்) கிராமத்தின் அருகில் பாலாற்றின் குறுக்கே ரூ.42.16 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைத்திட அரசு ஆணையிடப்பட்டதனை தொடர்ந்து கடந்த 31-7-2020 அன்று முதல்-அமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அதன்படி உத்தேசிக்கப்பட்ட இடத்தில் பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த வேலையில் பொதுமக்கள் சிலர் உள்ளாவூர் மற்றும் பினாயூர் கிராமங்களுக்கிடையே தடுப்பணைக் கட்டப்பட வேண்டும் என தொடர்ந்து பணியினை செயல்படுத்த விடாமல் தடை செய்து வந்தனர்.

இதையடுத்து, திருமுக்கூடல் பகுதியிலிருந்து மேலச்சேரி வரை மட்ட அளவுகள் பொதுப்பணித்துறையால் எடுக்கப்பட்டு தற்பொழுது தடுப்பணை கட்டப்பட்டு வரும் இடம், பொதுமக்கள் சிலர் கூறும் இடம் ஆகியவற்றின் ஆற்றின் குறுக்குவெட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஆற்றின் பள்ளம் மற்றும் நீளத்தை விவரமாக பொதுமக்களுக்கு செயற்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் சிலர் கோரும் இடத்தில் தடுப்பணை கட்டப்படுமானால் 3 மடங்கு செலவாகும் என்றும், மீண்டும் அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களுக்குள்ளாக கலந்தாலோசனை செய்து இறுதி முடிவினை இரு தினங்களுக்குள் தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 24-10-2020 அன்று (நேற்று) மீண்டும் பொதுமக்களுடன் ஆலோசனை மேற்கொண்டதில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பணை தற்போது பணி நடைபெறுகின்ற இடத்திலேயே தொடர்ந்து கட்டப்பட்ட வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு இணங்கவும், தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் தடுப்பணை தொடர்ந்து தற்போது கட்டப்பட்டு வரும் இடத்திலேயே 25-10-2020 (இன்று) முதல் நடைபெறும் என இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் நீரியல் சார்ந்த காரணங்களின் அடிப்படையில் இடம் தேர்வு செய்யப்பட்டு பழையசீவரம் - பழவேரி இடையே பாலாற்றின் குறுக்கே (திருமுக்கூடல் தரைப்பாலத்தில் இருந்து 550 மீட்டர் கீழ்புறம்) கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியினை தடுக்கும் நோக்கில் எந்தவொரு நபர் செயல்பட்டாலும் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story