தேவர் ஜெயந்தி விழா: ஊர்வலம்-விளம்பர பதாகைகளுக்கு அனுமதி கிடையாது - ஆலோசனை கூட்டத்தில் முடிவு


தேவர் ஜெயந்தி விழா: ஊர்வலம்-விளம்பர பதாகைகளுக்கு அனுமதி கிடையாது - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 25 Oct 2020 12:10 AM GMT (Updated: 25 Oct 2020 12:10 AM GMT)

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஊர்வலம் நடத்த, விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடப்பதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து காவல்துறை மற்றும் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சுதேசன், பத்மாவதி, கஸ்தூரி, அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை, முக்குலத்தோர் புலிப்படை மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தேவர், மாவட்ட செயலாளர் முருகன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை, அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் செண்பகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஆண்டு பசும்பொன் மற்றும் காளையார் கோவில் செல்ல அனுமதி இல்லை. சொந்த கிராமங்களில் மரியாதை செலுத்தும் விழாவுக்கு அந்தந்த போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றவர்கள் மட்டும் 30-ந் தேதி அந்தந்த கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்தை வைத்து சமூக இடைவெளியுடன் மரியாதை செலுத்த வேண்டும். பிற சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் உருவப்படம் வைத்து வழிபட அனுமதி இல்லை.

சமுதாய கொடியேற்றவோ, ஒலி பெருக்கி அமைக்கவோ, கலைநிகழ்ச்சிகள் நடத்தவோ, விளையாட்டு போட்டிகள் நடத்தவோ அனுமதி கிடையாது. ஜோதி, முளைப்பாரி, சிலம்பம் மற்றும் பால்குட ஊர்வலத்துக்கும், விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கவும் அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் ரிப்பன் கட்டிக்கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனுமதி பெறாமல் வைக்கப்படும் உருவப்படம், பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் உடனடியாக அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் சாதி மோதல் மற்றும் பிரச்சினைகள் ஏற்படாமல் சுமூகமாக ஜெயந்தி விழாவை நடத்தி முடித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு நடந்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவது என தீர்மானிக்கப்பட்டது.

Next Story