ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு


ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
x
தினத்தந்தி 25 Oct 2020 12:22 AM GMT (Updated: 25 Oct 2020 12:22 AM GMT)

ஹாவேரி அருகே, குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஹாவேரி, 

ஹாவேரி மாவட்டம் பேடகி டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் அஜ்மல்(வயது 8), அக்மல்(9), ஜாபர்(12). இவர்கள் 3 பேரும் பேடகி டவுனில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் அருகே உள்ள மைதானத்தில் அஜ்மல், அக்மல், ஜாபர் ஆகிய 3 பேரும் விளையாடி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் மைதானத்தின் அருகே தோண்டப்பட்டு உள்ள 10 அடி ஆழ குழிக்குள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தனர். கடந்த சில தினங்களாக பேடகியில் பெய்த கனமழையால் அந்த குழிக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால் குழிக்குள் விழுந்த 3 பேராலும் வெளியே வர முடியவில்லை. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

விசாரணை

இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள், சிறுவர்கள் 3 பேரும் தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேடகி டவுன் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் அஜ்மல், அக்மல், ஜாபரின் உடல்களை மீட்டனர்.

3 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேடகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story