மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் மழையால் பாதித்த பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார் + "||" + Eduyurappa personally visited the rain-affected areas in Bangalore

பெங்களூருவில் மழையால் பாதித்த பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார்

பெங்களூருவில் மழையால் பாதித்த பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார்
பெங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் அவர், மழையால் பாதித்த குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பெங்களூரு, 

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஒசகெரேஹள்ளி, குமாரசாமி லே-அவுட், பனசங்கரி, எச்.எஸ்.ஆர். லே-அவுட், கெங்கேரி, ராஜராஜேசுவரிநகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. அந்த பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. குறிப்பாக ஒசகெரேஹள்ளி, தத்தாத்ரேயா லே-அவுட்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து, அங்கு மாநகராட்சி, போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடியூரப்பா ஆலோசனை

இந்த நிலையில், மழையால் பெரிதும் பாதித்த ஒசகெரேஹள்ளி, தத்தாத்ரேயா லே-அவுட் பகுதிகளுக்கு நேற்று காலையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தா, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, பெங்களூருவில் மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன், முதல்-மந்திரி எடியூரப்பா தன்னுடைய வீட்டில் நேற்று மதியம் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், மந்திரி ஆர்.அசோக், மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தா, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மந்திரி ஆர்.அசோக், முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் விளக்கமாக எடுத்து கூறினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் மழையால் பாதித்த பகுதிகளில் உணவு, குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்கும்படியும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை முடுக்கிவிடும்படியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்தார். குறிப்பாக இன்னும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்பதால், இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

எடியூரப்பா பார்வையிட்டார்

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தனது வீட்டில் இருந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். முதலாவதாக ஒசகெரேஹள்ளி பகுதிக்கு சென்று அவர் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா பார்த்தார். மேலும் அங்கிருந்த மக்களிடம் மழை பாதிப்பு குறித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். அதே நேரத்தில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்கும்படியும், வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.

ஒசகெரேஹள்ளியை பார்வையிட்ட பின்பு தத்தாத்ரேயா லே-அவுட் மற்றும் குமாரசாமி லே-அவுட் பகுதிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்ற அவர், அப்பகுதி மக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டு அறிந்து கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகளையும், நிவாரண உதவி வழங்குவதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி அளித்தார்.

முன்னதாக தன்னுடைய வீட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம்

பெங்களூருவில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) பெய்த கனமழையின் காரணமாக நகரில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழையால் உடைமைகளை இழந்தவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். காசோலை மூலமாக நிவாரண நிதி வழங்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மழையால் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டாலும், ஏற்படவில்லை என்றாலும், பொருட்கள் சேதம் அடைந்திருப்பதால், தற்சமயம் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளும் நோக்கத்துடன் ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மழை பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள நானே, அந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளேன். மந்திரி ஆர்.அசோக் மற்றும் அதிகாரிகள் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நேரத்தில் அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

இன்று (அதாவது நேற்று) மற்றும் நாளை (இன்று) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளேன். நிவாரண பணிகளும், நிவாரண உதவிகள் வழங்குவதும் மும்முரமாக நடந்து வருகிறது. எனவே மக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்.
2. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது மந்திரி பரபரப்பு புகார்
எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி கட்சி மேலிடத்திற்கு புகார் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
3. கர்நாடகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு இல்லை: எடியூரப்பா திட்டவட்டம்
கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? எடியூரப்பா விளக்கம்
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் அவை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு கிடையாது; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும், வைரஸ் பரவலை தடுக்க அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.