நெல் கொள்முதல் குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாகையில், மத்திய குழுவினர் பேட்டி


நெல் கொள்முதல் குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாகையில், மத்திய குழுவினர் பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2020 2:50 AM GMT (Updated: 25 Oct 2020 2:50 AM GMT)

22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நாகையில், மத்தியக்குழுவினர் கூறினர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் யாதேந்திரஜெயின் தலைமையில் அதிகாரிகள் யூனுஸ், ஜெய்சங்கர், பஷந்த் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். காலையில் மயிலாடுதுறை வட்டார பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த இந்த குழுவினர், மதியம் நாகப்பட்டினத்துக்கு வந்தனர்.

நாகை அருகே சாட்டியக்குடியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், அங்கு கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டனர். அப்போது அவர்கள், நெல்மூட்டைகளில் ஊசி கரண்டி மூலம் துளையிட்டு நெல்லை பரிசோதனைக்காக எடுத்தனர்.

பின்னர் பரிசோதனைக்காக எடுத்த நெல்லை தாங்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து அந்த நெல் எந்த பகுதியில் விளைந்தது? யாருடைய நிலத்தில் விளைந்தது? இந்த நெல் எந்த ரகத்தை சேர்ந்தது? போன்ற விவரங்களை குறிப்பெடுத்து எழுதி வைத்துக்கொண்டனர்.

ஆய்வுக்கு பின் அறிக்கை

பின்னர் அதிகாரிகள் குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டும் கொள்முதல் செய்கிறது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய கொள்முதல் செய்த நெல்லை எடுத்து செல்கிறோம். ஆய்வகத்தில் இந்த நெல் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல கீழ்வேளூர் தாலுகா வெண்மணியில் செயல்படும் கொள்முதல் நிலையத்தில் இருந்தும் நெல் மாதிரிகளை மத்திய குழுவினர் எடுத்து சென்றனர்.

கொள்ளிடம்

முன்னதாக கொள்ளிடம் அருகே புத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் சுப்பிரமணியன், மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் யாதேந்திர ஜெயின், யூனுஸ், ஜெய்சங்கர், பஷந்த் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நெல் மூட்டைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தரக்கட்டுப்பாடு பொறுப்பு துணை மேலாளர் முத்தையன், கொள்முதல் இயக்க துணை மேலாளர் சுவாமிநாதன், கொள்முதல் அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story