இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: கொரோனாவால் களையிழந்த கடைவீதிகள்


இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: கொரோனாவால் களையிழந்த கடைவீதிகள்
x
தினத்தந்தி 25 Oct 2020 8:43 AM IST (Updated: 25 Oct 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி தஞ்சையில் கடைவீதிகள் களையிழந்து காணப்பட்டன. பூச்சந்தை மற்றும் அவல், பொரி விற்பனை செய்யும் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தஞ்சாவூர்,


ஆயுதபூஜை பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை தினத்தன்று வீடு, கடைகள், நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றில் தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள், கருவிகளை, எந்திரங்களை சுத்தம் செய்து பூஜை செய்து படையலிட்டு கொண்டாடுவார்கள்.

இதற்காக தஞ்சை காமராஜர் மார்க்கெட், திலகர் திடல் அருகே உள்ள மாலைநேர மார்க்கெட், கீழவாசல், உழவர் சந்தை போன்ற இடங்களில் வாழைத்தார், பூசணிக்காய், வாழைக்கன்றுகள் போன்றவை விற்பனை செய்யப்படும். நேற்று இந்த இடங்களில் வாழைத்தார், பூசணிக்காய், வாழைக்கன்று, தோரணங்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதே போல் கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

கூட்டம் குறைவு

குறிப்பாக உழவர் சந்தைகளில் வாழைத்தார், வாழைக்கன்றுகள், பூசணிக்காய் போன்றவை குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் தென்னை ஓலைகளால் ஆன தோரணங்களும் முக்கிய இடத்தை பிடிக்கும். இந்த தென்னை ஓலைகளால் ஆன தோரணங்களையும் ஆங்காங்கே விற்பனைக்காக வைத்திருந்தனர்.

இதே போல தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டிலும் ஆயுதபூஜையையொட்டி வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது. கடைவீதிகளில் மாலைநேரத்தில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதேபோல் தஞ்சை உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அங்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தன. வியாபாரமும் மந்தமாகவே காணப்பட்டது.

மக்கள் கூட்டம்

அவல், பொட்டுக்கடலை, பொரி விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவல் கிலோ ரூ.60-க்கும், பொட்டுக்கடலை ரூ.100-க்கும், பொரி பாக்கெட் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் அதிகமாக வாங்கிச்சென்றனர்.

தஞ்சை பூச்சந்தையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்திருந்தது.

இருப்பினும் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1000, முல்லைப்பூ ரூ.1000, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.500, கோழிக்கொண்டை ரூ.100, செண்டிப்பூ ரூ.100, சம்மங்கி ரூ.300, ஜாதிமல்லி ரூ.800, கனகாம்பரம் ரூ,.1000, மருக்கொழுந்து கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story