திருவெறும்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேர் கைது


திருவெறும்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2020 4:13 AM GMT (Updated: 25 Oct 2020 4:13 AM GMT)

திருவெறும்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர், 

திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் சோலா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் பிரதீப் நலங்கிள்ளி. இவரது மனைவி மணிமேகலை (57). இவர் திருச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13-ந்தேதி வேலை முடிந்து பஸ்சில் வந்து இறங்கிய மணிமேகலை, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் நேற்று காலை தனிப்படை போலீசார் கல்லணை ரோட்டில் வாகன தணிக்கை செய்த போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களை மடக்கி விசாரணை செய்த போது, அவர்கள் திண்டுக்கலை சேர்ந்த தாலிப்ராஜா(28), பழனியை சேர்ந்த முகமது முஸ்தபா (20) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திண்டுக்கல் பாண்டியன் நகரில் திருடப்பட்டது என்பதும், இவர்கள் தான் ஆசிரியை மணிமேகலையின் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.

மேலும் தாலிப்ராஜா மீது திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 16 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story