350 பேருக்கு மட்டுமே அனுமதி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனைவரையும் அனுமதிக்காததால் போராட்டம்- போலீசார் - இந்து முன்னணியினர் தள்ளு முள்ளு


350 பேருக்கு மட்டுமே அனுமதி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனைவரையும் அனுமதிக்காததால் போராட்டம்-  போலீசார் - இந்து முன்னணியினர் தள்ளு முள்ளு
x
தினத்தந்தி 25 Oct 2020 11:30 AM GMT (Updated: 25 Oct 2020 11:21 AM GMT)

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 350 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அனைவரையும் அனுமதிக்க வலியுறுத்தி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலானது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பிரதான நுழைவுவாயில் விருதுநகர் மாவட்டத்திலும், கோவில் அமைந்துள்ள மலைப்பகுதி மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ளதால் அடிக்கடி பக்தர்களை அனுமதிப்பதில் இங்கு பிரச்சினை நடப்பது வழக்கம்.

இந்தநிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலையில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழாவில் பங்கேற்க கடந்த 9-ந் தேதியன்று பேரையூரில் நடைபெற்ற ஆர்.டி.ஓ. கூட்டத்தில் 7 ஊர் பொதுமக்கள் சார்பில் 350 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் மட்டுமே அனுமதி என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஏழு ஊர் நிர்வாகிகளிடம் அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் டோக்கன் பெற்ற நபர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி இல்லாத பக்தர்களை போலீசார் மற்றும் வனத்துறை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அனுமதிக்கப்படாத பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்த இந்து முன்னணியினர் பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினர்.

இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மேல் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி தர்ணாவில் ஈடுபட்ட பக்தர்களுக்கு டோக்கன்கள் கொடுத்து கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்வதற்காக இந்து முன்னணியினர் தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு வருகை புரிந்த நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது என போலீசார் கூறினர். இதையடுத்து இந்து முன்னணியினர் தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்வதாக கூறினர்.

அவர்களை முக கவசம் போட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீசார் கூறினர். அப்போது போலீசாரும் முக கவசம் அணியவில்லை. அவர்களும் அணிய வேண்டும் என கூறி வனத்துறை கேட்டிற்கு முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சிக்கும்போது தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் தாணிப்பாறை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய இந்து முன்னணியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Next Story